இந்த
முறை கண்டிப்பாக காமிக்ஸ் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சில முன்னேற்பாடுகளை செய்து வைத்தேன் (காமிக்ஸ் கூட்டம்னு சோன்னா விட மாட்டாய்ங்க). கல்லூரியில் TV programme செய்ய சொல்லி இருந்தார்கள். புத்தக விழாவை பற்றி நிகழ்ச்சி தயாரிப்பதாக சொல்லிக் கொண்டு கிளம்பினேன். இரவு 8:30க்கு ரயில் ஏறினால் நள்ளிரவு 2:30க்கு ஈரோடு வந்துவிடுமென தெரியாமல் ஏறிவிட்டேன். 6 மணி வரை ஸ்டேஷனிலேயே குட்டி தூக்கம் போட்டுவிட்டு அன்ன நடையாக பேருந்து நிலையம் வந்தபோது மணி 7:13! உண்மையாகவே ஆச்சரியப்பட்டுதான் போனேன். ஆமாம். எங்கும் வெற்றிலை பாக்கு எச்சிலை காணோம், சிறுநீர் தேங்கிய சாக்கடையையும் காணோம். இவை இல்லாத பஸ் ஸ்டாண்டை தமிழ்நாட்டில் இதுவரை கண்டதில்லை. பக்கத்தில் இருந்த கட்டண குளியலறை சென்று காலை அலுவல்களை முடித்துக்கொண்டு, சாவகாசமாக வ.உ.சி மைதானம் சென்று ஒரு செல்ஃபி எடுத்து முக புத்தக நண்பர்களுக்கு போஸ்ட் செய்துவிட்டு, பக்கத்தில் இருந்த பூங்காவை சுற்றி விட்டு 10:45க்கு LE JARDIN வந்து சேர்ந்தேன். ஓரளவு பெரிய ஹோட்டல்தான். வெளியே நின்று ஒருத்தர் ஹோட்டலையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார். என்னை போலவே அவரும் “பெரிய ஹோட்டலா இருக்கே இங்கதான் உண்மையா மீட்டிங்கா?” என நினைத்திருப்பார் போல! ஆளும் பார்த்த முகமாக தோன்றியது. உள்ளே போய் விசாரித்துக்கொண்டு லிஃப்டுக்காக காத்திருந்தபோது அந்த மனிதரும் வந்தார். முந்தி கொண்டு அவரே பேசத் தொடங்கினார். அவர்தான் நான் சந்திக்கும் முதல் காமிக்ஸ் நண்பர். பிரபு அண்ணன் (Facebook ல vs prabhu). பேச துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே சகஜமாகி விட்டோம்.
மீட்டிங்
அறைக்குள் நுழைந்தபோது எல்லோரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். வெள்ளை தொப்பி, டீ சர்ட்டில் “காமிக்ஸ் ஒரு காட்டாறு” என்ற வாசகத்துடன் ஒருவர் முன்னும் பின்னும் ஓடிக் கொண்டே இருந்தார். அவரை ரொம்ப காலமாக தெரியும் என்றாலும் நிஜ முகத்தை அப்போதுதான் பார்க்க முடிந்தது. பிரபு அண்ணன் சொன்னார் “தம்பி.. அவர்தான் மாயாவி சிவா”!!! இன்னும் எத்தனை பேர் இப்படி சஸ்பென்ஸ் வெக்க போறாங்களோ என யோசித்துக் கொண்டிருக்கும்போதே ஜெடர்பாளையத்தார் introஆக முகபுத்தகத்துல பாத்தப்ப ரொம்ப இளமையா இருந்தாரே?? இவர் அவர்தானா? என யோசித்துக் கொண்டே எழுந்தேன்.
“தம்பி பிரசாந்த் நல்லா இருக்கிங்களா? ஜெடர்பாளையம் சரவணக்குமார்”,
“பிரசாந்த்
கார்த்திக்”.
பெரிய
இத்தாலிய டெக்ஸ் புத்தகத்தை சுமந்து கொண்டு கலீல் ஜீ உட்கார்ந்திருந்தார். அவருக்கு ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு, வேற யாரையுமே அடையாளம் தெரியலையே? பேந்த பேந்த விழித்தபோது பிரபு அண்னன் ஒவ்வொருத்தரையும் சுட்டி காட்டி “அவர்தான் விஜயராகவன்(salem tex vijayaragavan), இவர்தான் திருப்பூர் குமார் ” என அறிமுகப்படுத்தினார்.
உள்ளே
விஜயன் சார் புகுந்ததும் மீட்டிங் ஹாலில் ஒரு சிறு அமைதி. பின்னாள் வயதுக்குரிய சிறிய தள்ளாட்டதுடன் செளந்திரப்பாண்டியன் அய்யா நுழைந்தார். என்னையரியாமலே எழுந்து நின்றேன். இரும்புக்கை மாயாவியின் மூலம் தமிழ் காமிக்ஸ் உலகில் மின்சாரம் பாய்ச்சியவரை நேரில் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இதற்கு பிறகான நிகழ்வுகளுக்கு விவரணைகள் தேவையில்லை. மாயாவி சாரின் வீடியோக்களை பார்த்தாலே போதும். எனவே Intercut செய்து சந்திப்பு குறித்த எனது கருத்துகளுக்கு செல்கிறேன்.
அனைவருக்கும்
பேச வாய்ப்பு கொடுப்பதாக எடிட்டர் சொன்னதிலிருந்து நிறைய பேச வேண்டுமென தயார் செய்திருந்தேன். வந்திருந்த கூட்டத்தை பார்த்தவுடன் நானே நிறைய நேரத்தை எடுத்துக்கொள்ள கூடாதென, பால்ய வயது காமிக்ஸ் நினைவுகள், கிராஃபிக் நாவல் ஆதரவு குரலோடு நிறைவு செய்து கொண்டேன். அங்கே எழுந்த பல தரப்பட்ட கருத்துகளையும் கேட்டு பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்த விஜயன் சாரை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. பல வகையான விருப்பங்களை கொண்ட வாசகர்களை ஒன்றிணைத்து அனைவரின் விருப்பத்திற்கும் செவி சாய்த்து 7 முதல் 77 வரை அனைவருக்கும் காமிக்ஸ் வெளியிடுவது எவ்வளவு கடினமான காரியம். இன்னமும் பலரும் கூட “ஸ்பைடரின் அந்த கதையை கலரில் போடுங்களேன்”, “ஆர்ச்சி எப்ப வரும்?” என கேட்டுக் கொண்டிருக்க எனக்கொ கிராஃபிக் நாவல் அவ்வளவுதானா?? என சிறு மனக்கிலேசம். “2017ல் கி.நாவுக்கு இடமுண்டு” என எடிசன் சொன்ன பிறகுதான் சிறு உற்சாகம் பிறந்தது(எத்தனை பேர் வேதனை பட்டார்களோ?). “இரத்தக்கோட்டை” தொடர் 2017ல் வண்ண மறுபதிப்பு என்ற அறிவிப்பும் வாசகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது(படிக்காத டைகர் தொடர் அது மட்டும்தான்). “அதென்ன டைகருக்கு மட்டும் எப்போதும் குண்டு புக்??” என சம்பத் அண்ணன் டெக்ஸுக்கு குண்டு புக் கேட்க ஆரம்பித்து, கேள்வி கணைகள் பல வழிகளில் எடிசன் மீது பாயத் தொடங்கியது. ஆனாலும் “டெக்ஸுக்கு வயசாகாது, எங்களுக்கு வயசாகிடுமே! அதுக்குள்ள டெக்ஸ் கதைகள் எல்லாம் தமிழ்ல வராதா?” எனக் கேட்ட போது எடிட்டரே சற்று மிரண்டுதான் போய்விட்டார்(Emotional movement )
இப்படியாக
மீட்டிங் போய்க் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. கல்லூரி என்கிற மந்தையாடுகளை சமாளிக்க வேண்டுமல்லவா? சுமாராக ஒரு interview போல எதாவது தயார் செய்து கொள்ளலாம் என நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு புத்தக விழாவுக்கு சென்று சிலரை சில கேள்விகள் கேட்டு ரெக்கார்ட் செய்து கொண்டு மீண்டும் காமிக்ஸ் ஸ்டாலுக்கு பக்கத்தில் வந்து பட்டறையை போட்டேன்.
ஒருசமயம்
சம்பத் அண்ணன் எனக்கு காமிக்ஸ் வாங்கி கொடுத்திருந்தார். அதற்கு அவருக்கு பணம் தர வேண்டியிருந்தது. அவருக்கு போன் செய்து விட்டு ஸ்டாலிலேயே காத்திருந்தேன். அப்போதுதான் சிவக்குமார் அண்ணனை பார்த்தேன். பார்த்ததும் வெகு இயல்பாக பேசி கொண்டிருந்தவர் “உனக்கு டெக்ஸ் டீ சர்ட் எடுத்துட்டு வந்தேன் வேற ஒரு நண்பருக்கு கொடுத்துட்டேன். கோவிச்சுக்காத தம்பி.இந்த டீ சர்ட்ட வெச்சுக்கோ” என்றவாறு ஒரு டீ-சர்ட்டை எடுத்து கொடுத்தார். முகம் காணா முகப்புத்தக நண்பர்களின் நட்பை எண்ணி ஒரு கணம் வியக்காமல் இருக்க முடியவில்லை. மேலும் காமிக்ஸ் குறித்து நான் எழுதும் கட்டுரைகள் குறித்தும், மொழிபெயர்ப்பு காமிக்ஸ் பற்றியும் உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தார். அவர் நண்பர்களிடமும் அறிமுகப்படுத்தினார். இவ்வளவு அன்புக்கும், நட்புக்கும் நான் தகுதியானவனா? என எனக்கே சற்று குழப்பமாகதான் இருந்தது. சம்பத் அண்ணன் வந்ததும் காமிக்ஸ் படிக்கும் “கடழ் யாழ்”(நிஜ பெயர் சொன்னார்கள் மறந்துவிட்டேன்) என்ற பெண்ணையும், அவரது சகோதரியையும் அறிமுகப்படுத்தினார். அவர்கள் இருவரும்தான் நான் பார்க்கும் முதல் காமிக்ஸ் ரசிகைகள்(முகப்புத்தகத்தில் கூட ரசிகர்கள் மட்டும்தான்).
அப்போதுதான்
காமிக்ஸ் சந்திப்பில் பேசிய மதன்குமார் என்ற ஒருவர் என்னுடன் வந்து பேசினார். 11ம் வகுப்பு படிப்பதாகவும், ஓவியம் வரைவதில் ஆரவம் இருப்பதாகவும் அறிமுகம் செய்து கொண்டார். அவருடைய ஓவியங்களை பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு ஓவியம் கற்றுக்கொள்ள வெகுநாளாய் ஆசை. அந்த பையனும் எனது ஊர்தன் என்று சொன்னதும் இரட்டிப்பு மகிழ்ச்சி. எனது மொபைல் எண்ணை கொடுத்துவிட்டு, சம்பத் அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் நான் எதிர்பாரா அந்த அதிசயம் நிகழ்ந்தது. அதற்கு முன் ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக்………
நான்
சிறுவனாய் இருக்கும்போதிலிருந்தே வரைவதில் அதிக ஆர்வமுண்டு. 11 வருடங்களுக்கு முன்பு என் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு பையன் இருந்தான். அவனுக்கும் வரைவதில் ஆர்வமுண்டு. நான் வரைவதை பார்த்துக் கொண்டே இருப்பான். எங்கள் இருவருக்குமிடையே 7அல்லது 8 வயது வித்தியாசம் இருந்தாலும் பரஸ்பரம் நல்ல நட்பு இருந்தது. ஒருநாள் திடீரென எந்த தகவலும் இல்லாமல் அந்த பையனின் குடும்பம் வீட்டை காலி செய்துவிட்டு ஊரைவிட்டு போய்விட்டார்கள். அதற்கு பிறகு அவனை பார்க்கவில்லை. சில சமயம் அவனை பற்றிய எண்ணங்கள் எழுந்ததுண்டு. காலபோக்கில் அவனது நினைவுகள் பின்னே தள்ளப்பட்டுவிட்டன. ஃப்ளாஷ் பேக் முடிந்தது.
ஏன்
இந்த ஃப்ளாஷ் பேக் என சிலருக்கு புரிந்திருக்கலாம். ஆம் என் பால்ய வயது சினேகிதன்தான் என் எதிரே நிற்கும் மதன் குமார். என்னால் பேச முடியவில்லை. அவனை கட்டியணைத்து கொண்டேன். என் வாழ்நாளில் மறக்க இயலா சம்பவமிது. நமது நண்பர்கள் அனைவரிடமும் அவனை அறிமுகப்படுத்தினேன். அவனும் அவனது ஓவிய ஆசிரியர்களை அழைத்து,”நான் வரையிறதுக்கு இன்ஸ்பிரேஷனா ஒரு அண்ணன் இருந்தாங்கனு சொன்னேன்ல.. அது இவங்கதான்” என அறிமுகம் செய்துவைத்தான். எனக்கு சற்றைக்கெல்லாம் மயக்கம்மெடுக்க தொடங்கியது. அவன் வரையும் ஓவியத்தின் துள்ளியத்தில் 100க்கு 1 சதவீதம்தான் நான் வரைவது. அப்படிப்பட்ட பையனுக்கு நான் இன்ஸ்பிரேஷனா? அவனை ஸ்டாலுக்கு அழைத்து சென்று “உனக்கு பிடித்த காமிக்ஸை வாங்கிக்கோ” என்றேன். அவன் எனக்கு பிடித்த காமிக்ஸ் ஒன்றை வாங்கி தர சொன்னான். அவனுக்கு “சிப்பாயின் சுவடுகளில்” வாங்கி பரிசாக அளித்தேன். அங்கிருந்து கிளம்பவே மனம் வரவில்லை. 11 வருட நட்பை சேர்த்து வைத்த காமிக்ஸை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. இத்தனைக்கும் பால்யங்களில் நாங்கள் இருவருமே காமிக்ஸ் வாசித்தது இல்லை. எப்படி ஓவியத்தின் மீது இருவருக்கும் ஒரே ஈர்ப்போ அப்படியே காமிக்சின் மீதும்! எங்களை மீண்டும் சந்திக்க செய்த பலங்காமிஸ் பல்லாயிரம் சாமிக்கு கோடி கோடி நன்றிகள்!!!
அவனுக்கு
காமிக்ஸ் வாங்கி கொடுத்தது போக, நானும் காமிக்ஸ் வாங்கி கொண்டு பர்ஸை பார்த்தால் சம்பத் அண்ணனுக்கு கொடுக்க வேண்டிய தொகையும் சேர்ந்து காலியாகிவிட்டது புரிந்தது. (அவர் எனக்கு மேக்னம் ஸ்பெஷல் வாங்கி கொடுத்ததற்காக கொடுக்க வேன்டிய பணம்). அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் “பரவாயில்லை பிரசாந்த் உன்கிட்ட இருக்கும்போது கொடு, நோ ப்ராப்ளம்” என்று சாவகசமாய் சொல்லிவிட்டு செல்ஃபி எடுப்பதில் பிஸியாகிவிட்டார். நன்கு பழக்கப்பட்டவர்களே 100ரூபாய் கொடுத்துவிட்டு 1000தடவை கேட்டுக்கொண்டிருக்கும் உலகில் முகமறியா நட்புக்கு சம்பத் அண்ணன் செய்யும் உதவி….. சொல்ல வார்த்தைகளில்லை. அனைவரையும் சந்தித்த மகிழ்ச்சி அடங்குவதற்குள் பிரிய வேண்டுமே என்கிற எண்ணம் மனதில் வலியை உண்டாக்கிற்று.
ரயிலில்
ஏறி புறப்படும்போது ஈரோட்டை திரும்பி பார்க்கையில் மீண்டும் எப்போது வருவேனோ என நினைத்துக் கொண்டேன்.
காமிக்ஸ்
ரசிகனாய் ஆனதற்கும், காமிக்ஸ் நண்பர்கள் கிடைத்ததற்கும் லயன் முத்து காமிக்ஸுக்கும், செளந்திரப்பான்டியன் அய்யாவுக்கும், விஜயன் சாருக்கும் நன்றிகள் பல..!
“என்னையும், காமிக்ஸையும் படைத்தவனுக்கு நன்றிகள் பல”
மன்னிக்க:
நிறைய நண்பர்களை சந்தித்ததால் கூடியமட்டும் நினைவு கூர்ந்து எழுதியுள்ளேன். மற்ற நண்பர்களின் பெயர்கள் விடுபட்டுவிட்டது. காரணம் பெயராக மட்டுமே பார்த்தவர்களை நிஜத்தில் பார்த்தபோது பெயரையும், மனிதர்களையும் குழப்பிக்கொண்டு விட்டேன். தயை கூர்ந்து மன்னிக்க வேண்டுகிறேன்.



