Sunday, 25 September 2016

காமிக்ஸ்.. காமிக்ஸ்..

சித்திரக் கதை(காமிக்ஸ்) எனும் பெயர் தமிழ்நாட்டில் ஒரு சாராருக்கு என்னவென்றே தெரியாத சமாச்சாரமாகவும், மற்றொரு சாராருக்கு உயிர் மூச்சாகவும் விளங்கி வருகிறது. சிலர் 80களில் வெளியான இரும்புக்கை மாயாவியை இன்னும் பழைய புத்தக கடைகளில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக காமிக்ஸும், கார்ட்டூன்களும் குழந்தைகளுக்கானது என்ற எண்ணவோட்டம் தமிழ் கூறும் நல்லுலகத்தில் அதிகம். ஆனால் இந்த பொதுப்புத்தியைத் தாண்டி காமிக்ஸ் என்னும் தொடர் சித்திர மரபு(Sequential Art) அதன் கேளிக்கை வடிவத்தைத் தாண்டி சென்று விட்டது. கிராஃபிக் நாவல் எனப்படும் காமிக்ஸ் வகையின் ஒரு பகுதியானது வரலாறு, பண்பாடு, போர்களின் விளைவுகள், மக்களின் உளவியல் சார்ந்த விஷயங்களை கதைகளின் மூலம் பதிவு செய்கின்றன.

ஆதிகாலத்து குகை ஓவியங்கள், செதுக்கு சிற்பங்கள் ஆகியவை சித்திரக் கதைகளின் தொடக்கம் என சொல்லலாம். மொழியற்ற காலத்திலே அவர்கள் வாழ்க்கை முறையை பதிவு செய்ய உருவாக்கிய அந்த தொடர் சித்திரங்கள் இன்றும் அவர்கள் வாழ்க்கையை நமக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றன மொழியே இல்லாமல். ஒவ்வொரு நாடும் தனக்கென தனி காமிக்ஸ் நாயகர்கள், கதைகள், சித்திரமுறைகளை உருவாக்கிக்கொண்டன. அப்படி உருவான பல காமிக்ஸ் நாயகர்களை தமிழில் மொழிமாற்றம் செய்து சில நிறுவனங்கள் வெளியிடத் தொடங்கின. ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ், மேகலா காமிக்ஸ், பார்வதி சித்திரக்கதைகள் என சுமார் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் காமிக்ஸ் தொழிலில் ஈடுப்பட்டிருந்தன. ஜேம்ஸ் பாண்ட், சிஸ்கோ கிட், முகமூடி வீரர் மாயாவி, இரும்புக்கை மாயாவி என பல நாயகர்கள் அந்நாளைய குழந்தைகளுக்கு மிகப்பெரும் ஈர்ப்பாய் இருந்தார்கள்.இந்தியாவில் சுப்பாண்டி, சிக்கரி சாம்பு, காளி போன்ற காமிக்ஸ் நாயகர்கள் உருவாகி பிரபலமானர்கள். ஒரு கட்டத்தில் காமிக்ஸ் விற்பனை மலிவடையத் தொடங்கியது(டி.வி பிரபலமான காரணமோ?). பிறகு பல நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தங்களது விற்பனையை நிறுத்திக்கொண்டன. தற்போது தமிழில் லயன் காமிக்ஸ் நிறுவனம் மட்டும் காமிக்ஸை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.மேலும் சில புதிய நிறுவனங்களும் காமிக்ஸை வெளியிடத் தொடங்கியுள்ளன. இப்படியான காலகட்டத்தில்தான் அந்நாளைய சிறுவர்கள்(இப்போது பெரியவர்கள்) தங்களது பால்ய பருவத்தை மீட்டெடுக்கும் பொருட்டு பழைய புத்தகக் கடைகளில் பழங்காமிக்ஸை தேடித் திரிகின்றனர்.

சிறுவர்களுக்கு தீராத கற்பனை வளத்தை ஊட்டுவதில் காமிக்ஸ் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. கதைகள், வண்ணக்கலவைகள், கதாப்பாத்திரங்கள் என அனைத்திலும் சிறுவர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்படும் காமிக்ஸ்களை போலவே அனைத்து வயதினருக்கும் முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கென தனியாக காமிக்ஸை பல நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. மூன்று நாடுகள் காமிக்ஸ் புத்தகங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. அமெரிக்கன் காமிக்ஸ், பிராங்கோ-பெல்ஜிய காமிக்ஸ், மாங்கா காமிக்ஸ்(ஜப்பான்). இதில் அதிகம் காமிக்ஸ் தொடர்களை வெளியிடுவது பிராங்கோ-பெல்ஜிய நிறுவனங்கள். பெரும்பாலும் தமிழில் வெளியான புகழ்பெற்ற காமிக்ஸ் தொடர்கள் பிராங்கோ-பெல்ஜிய, இத்தாலிய கதைகள் என்பதால் தமிழ் நாட்டிற்கும், பிரான்சிற்கும் இடையே ரசனை சார்ந்த ஒற்றுமை உண்டென சொல்லலாம். பிராங்கோ-பெல்ஜிய கதைகளின் நாயகர்கள் பெரும்பாலும் தமிழ் படங்களின் நாயகர்கள் போல ஆக்‌ஷன் ஹீரோக்களாகவோ, டிடெக்டிவ்களாகவோ, இருந்தனர். இதுவும் அவர்களது ரசனைகளோடு நாம் ஒன்ற காரணமாக இருக்கலாம். ஜப்பானின் மாங்கா காமிக்ஸ் பிராங்கோ-பெல்ஜிய கதைகளிலிருந்து வித்தியாசப்பட்டது. மதக் கொள்கைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அதன் கதைகள் முதலில் இருந்தன. பின்னாளில் இரண்டாம் உலகப்போரின் தாக்கம் அவர்களது படைப்புகளில் வெளிப்படத் தொடங்கின. கார்ட்டூன் முதல் காமிக்ஸ் வரை அவர்களது பாணி முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அவை போருக்கு முந்தைய, பிந்தைய வாழ்க்கை முறைகளை பதிவு செய்தது. அமெரிக்காவின் மனநிலை பிரான்சை விடவும், ஜப்பானை விடவும் வேறுப்பட்டதாக இருந்தது. சூப்பர் ஹீரோக்கள் எனப்படும் அதிசய சக்தி பெற்ற நாயகர்களே அவர்களது காமிக்ஸ் நிறுவனங்களுக்கு ஆதர்சமாய் இருந்தனர், இருக்கின்றனர். 75 வருட பழமையான Marvel Comics,DC Comics மீண்டும் தனது முந்நூறு முக்கோடி நாயகர்களின்(இவர்களும் 75வருட பழமை வாய்ந்தவர்கள்தான்) கதைகளை மறு உருவாக்கம் செய்யப் போவதிலிருந்து அவர்களுக்கு சூப்பர் ஹீரோக்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது தெரிகிறது.இந்த மூன்று நாட்டின் காமிக்ஸ் கதைகளும், நாயகர்களும் அவர்கள் வாழ்க்கை முறையிலிருந்தும், அவர்களின் தேவைகளிலிருந்தும் உருவாகியிருப்பதை சிறிதாவது அவதானிக்க முடிகிறது.


காமிக்ஸ் ஏற்படுத்தும் தாக்கம் ஒரு திரைப்படம் பார்ப்பதை விட, ஒரு நாவலை படிப்பதை விட அலாதியானது. ஏனெனில் மேற்குறிப்பிட்ட பார்த்தல், படித்தல் இரண்டும் காமிக்ஸில் ஒரே சமயத்தில் நிகழ்வதால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இதை உணர்ந்த காமிக்ஸ் கதையாசிரியர்களால் காமிக்ஸ் பொழுதுபோக்கு என்பதை தாண்டி ஒரு கலையாக, ஊடகமாக மாறியது. அவர்கள் வரலாற்றின் துயரம் படிந்த பக்கங்களை, மக்களின் இருள் படர்ந்த வாழ்வை காமிக்ஸின் மூலம் பதிவு செய்தனர். அவை கிராஃபிக் நாவல் எனப்பட்டன. அமெரிக்காவில் MAD எனும் பத்திரிக்கையை நடத்தி வந்த “கெயின்ஸ்(Gaines)” என்பவர் EC COMICS(Entertainment Comics) என்ற காமிக்ஸை தொடங்கினார். அது அமெரிக்காவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த காமிக்ஸ் நிறுவனத்தை மூட சொல்லி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இறுதியாக அந்நிறுவனமும் மூடப்பட்டது. காமிக்ஸ் ஊடகத்தின் வலிமையை உணர்ந்த அமெரிக்க அரசு காமிக்ஸ் தணிக்கை குழு ஒன்றை உருவாக்கியது. இதன் மூலம் தங்களுக்கு எதிரான எந்த செய்தியும் பகிரப்படாது என கருதினர். சிலர் சிறு சிறு காமிக்ஸ் துணுக்குகளாக சிறு பத்திரிக்கைகளில் வெளியிடத் தொடங்கிய கதைகள் நாளடைவில் தொடர் கதைகளாக பெரும் பிரசுர நிறுவனங்களால் வெளியிடப்பட்டன.1974ல் The National Coalition Against Censorship (NCAC) என்ற அமைப்பு தணிக்கை குழுவினால் பொய்யான காரணங்களுக்காக நிராகரிக்கப்படும் காமிக்ஸ்களுக்கு ஆதரவாக இணைந்தது. காமிக்ஸ் வெளியீட்டு நிறுவனங்கள், கதையாசிரியர்கள், ஓவியர்கள், விற்பனை ஏஜெண்டுகளுக்கு உதவும் விதமாய் 1986ல் The Comic Book Legal Defense Fund (CBLDF) எனும் அமைப்பு நிறுவப்பட்டது. ஒரு பொம்மை புத்தகத்திற்காய் இத்தனை போராட்டமா? என நீங்கள் வியக்கலாம். நான் முன்னர் கூறியதுதான் பார்த்தல், படித்தல் இரண்டும் காமிக்ஸில் ஒரே சமயத்தில் நிகழ்வதால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். அதை அவர்கள் புரிந்து கொண்டதுதான் காரணம்.

நமது நாட்டில் வெகுஜன மக்கள் சினிமாவுக்கும்,கிரிக்கெட்டிற்கும் காட்டும் ஆர்வத்தை ஓவியம், இசை போன்ற பிற கலைகளுக்கு காட்டுவதில்லை. நமது நாட்டிலும், தமிழ்நாட்டிலும் கூட காமிக்ஸ்களாய் வெளியிட எத்தனையோ வரலாற்று சம்பவங்களும், மக்களின் வாழ்க்கை முறைகளும், பல செவி வழிக் கதைகளும் கொட்டிக் கிடக்கின்றன. R L Steivenson, Charles Dickins போன்ற கிளாசிக் எழுத்தாளர்களின் நாவல்களிலிருந்து Scince Fiction கதைகள் வரை திரைப்படங்களாக எடுக்கமுடியாத அளவுக்கு காமிக்ஸ்கள் வெளியாகி இருக்கின்றன. ஒரு நாவலை மொழிப்பெயர்ப்பதை விட காட்சிகளாக்கினால் அது அனைத்து மொழியினராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியும். அதனால்தான் பிரபல நாவல்கள் காமிக்ஸ்களாக மீளுருவாக்கம் செய்யப்படுகின்றன. மிகப்பெரும் விஞ்ஞானிகளும், பலதுறை மேதைகளும், திரைப்பட இயக்குனர்களும் அவர்கள் வாழ்வில் காமிக்ஸின் தாக்கம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் கூறுகின்றனர். பல நாடுகளில் காமிக்ஸ் படிப்பிற்காக தனி பல்கலைகழகங்களே இருக்கின்றன. மேலும் பல நாடுகளில் காமிக்ஸ் விருதுகளும், பயிலரங்கங்களும், விவாதங்களும் தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலை நாடுகளில் காமிக்ஸுக்கென தனி நூலகங்கள் செயல்படுகின்றன. ஜப்பானில் வருடம் இருமுறை Comiket என்ற விழாவின் மூலம் இளம் காமிக்ஸ் படைப்பாளிகள் சந்தித்துக் கொள்கின்றனர். இவ்விழாவில் மூத்த படப்பாளிகளின் கருத்தரங்கங்களும் நடைபெறுகிறது. பொதுவாக காமிக்ஸை மேலோட்டமாக படிப்பது என்று மட்டும் பார்க்காமல் கதை, கரு, ஓவிய பாணி, கதை நிகழும் களம், மாந்தர்கள், ஆசிரியர் அந்த கதையை உருவாக்கியதற்கான காரணம், அதன் உள்அரசியல், வண்ண கலவை போன்றவற்றை உருவாக்க படப்பாளிகள் எடுத்துக்கொண்ட சிரமங்கள் பற்றியும் அறிந்துக் கொள்வது அவசியம் என அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

இப்படியாக உலகம் ஒரு பக்கம் வேகமாய் காமிக்ஸின் அடுத்த படிநிலைகளை கடந்து போய்க் கொண்டிருக்க நாமோ அதன் ஆரம்ப நிலைகளை கூட தொடாமல் கண்களை மூடிக்கொண்டிருத்தல் சரியல்ல என்பது என் கருத்து.எந்த ஒரு சம்பவமும் காட்சி படிமங்களின் மூலமாக சொல்லப்படும்போது மொழி அவசியமற்று போகிறது. மேலும் காட்சி படிமங்கள் சொல்லவேண்டிய கருத்தை நம்மை அறியாமலே நம் ஆழ்மனதில் விதைக்கக் கூடியவை. காட்சி படிமங்கள் மக்களிடையே தொடர்பு மற்றும் இணைப்பை ஏற்படுத்தும். அப்படியான தொடர்பு சிந்தித்தலுக்கும், செயல்படுத்துதலுக்குமான திறனை உருவாக்கும். ஒரு கலையின் உன்னதமான பணி அதன் சமூகம் சார்ந்த விழுமியங்களை பதிவு செய்வதில்தான் இருக்கிறது. இது பற்றிய எந்தவொரு விழிப்புணர்வுமின்றி காமிக்ஸை குழந்தைகளுக்கானது என பார்க்காமல் அதன் மதிப்பை, சக்தியை புரிந்து கொண்டு ஒரு படியாவது முன்னேறுவதுதான் நம்முடைய தொன்மங்களை பதிவு செய்யவும், மற்ற மொழியினருக்கும் கொண்டு செல்லவும் உதவும்.

நன்றி: ஓவியர் டிராட்ஸ்கி மருது,பேசா மொழி
திரு.விஜயன், பிரகாஷ் பப்ளிஷர்ஸ்
Graphic novels: The Comic Book Legal Defense Fund (CBLDF)

ராம்ஸீயின் சாபங்கள்


ஒரு நாள் இரவில் எகிப்தில் உள்ள புராதானமான ராம்ஸீயின் கல்லறையில் உள்ள கல்வெட்டு ஒன்றை இரு திருடர்கள் திருடிக் கொண்டு செல்கின்றனர். போலீஸ் ஹெலிகாப்டெரில் அவர்களை துரத்திக்கொண்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக அந்த புராதான கல்வெட்டை ஓரிடத்தில் புதைத்துவிட்டு கிளம்பும் நேரத்தில் ராம்ஸீயின் புதைக்கப்பட்ட சடலம் மம்மி வடிவில் அவர்கள் முன் தோன்றி கல்வெட்டை திரும்ப கொடுக்குமாறு கேட்கிறது. அவர்கள் மறுத்துவிடவே ராம்ஸீயின் சாபத்தின் விளைவாக அழிந்து போகின்றனர். அந்த கல்வெட்டு புதைக்கப்பட்ட இடம் வயதான தம்பதியினர் மியூரியல் மற்றும் யூஸ்டெஸ் வாழும் வீட்டிம் முன் பகுதி. அந்த தம்பதியினர் ஊரைவிட்டு விலகி தனியாக ஒரு அத்துவான வனப்பகுதியில் தனியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரே துணை, கரேஜ்(courage)(பொருள்: வீரம், நம்பிக்கை) என்னும் அவர்களது பிங்க் நிற நாய்க்குட்டிதான்! (பெயரளவில் மட்டுமே வீரன்) கரேஜ் பள்ளத்தைத் தோண்டும்போது ராம்ஸீயின் கல்வெட்டு கிடைக்கிறது. அதை எடுத்து சென்று யூஸ்டெஸிடம் கொடுக்கிறது. யூஸ்டெஸ் சுயநலம் பிடித்தவன், பணத்தாசைக்காரன். அந்த கல்வெட்டு மில்லியன் டாலர் பெறுமானமுள்ளது எனத் தெரிந்தவுடன் அதை பணமாக்க முற்படுகிறான். அந்த கல்லினால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்த கரேஜ் அதை தூக்கியெறிய சொல்லி குறிப்பால் உணர்த்துகிறது(கரேஜால் மனிதர்களிடம் பேசமுடியாது). அதை யூஸ்டெஸ் கண்டுகொள்ளவில்லை. அன்றிரவு ராம்ஸீயின் சவம் யூஸ்டெஸின் வீட்டின்முன் தோன்றுகிறது. கல்வெட்டை திரும்ப கேட்கிறது. யூஸ்டெஸ் அதனிடமே பேரம் பேசவே ராம்ஸீ அவர்கள் மேல் மூன்று சாபங்களை ஏவுகிறது. இந்த சாபங்களிலிருந்து கரேஜ் மியூரியலையும், யூஸ்டெஸ்ஸையும் எப்படி காப்பாற்றியது? கல்வெட்டு முடிவில் என்ன ஆனது? என்பதை விருவிருப்பாகவும், அமானுஷ்யம் கலந்ததாகவும் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஜான்.ஆர்.டில்வொர்த்,கதையாசிரியர் பில் மார்சிலி. Courage the cowardly Dog என்னும் பிரபலமான கார்டூன் தொடரில் வெளியான ஒரு கதை இது. எத்தனையோ அமானுஷ்ய கார்டூன் தொடர்கள் வெளிவந்தாலும் கரேஜ் அவற்றில் வித்தியாசமானது. Courage the cowardly dog:The Ramse’s curse என்ற இந்த தொடரை என் சிறு வயதில் பார்த்தபோது மிகவும் பயந்தேன் (இப்போதும் கூட லைட்டா).


கரேஜ் தொடர்கள் அனைத்தும் அமானுஷ்யத்தை நகைச்சுவை கலந்த பயவுணர்வுடன் சொல்லக்கூடியவை. மொத்தமாக 56க்கும் மேல் வெளியான இந்த தொடர் பேய்கள், விண்வெளி ஜந்துக்கள், முட்டாள் விஞ்ஞானி,ஸோம்பிகள் போன்ற அம்மனுஷ்யம் நிறைந்த கதையமைப்பை கொண்டவை. கரேஜ் கதையின் தனித்துவம் ஒவ்வொரு கதையிலும் வரும் புதிய புதிய வில்லன்களை தவிர கதைகளம் கரேஜ்,யூஸ்டெஸ்,மியூரியல் இந்த மூன்று பிரதான பாத்திரங்களை சுற்றியே பின்னப்பட்டிருக்கும். அமைதியான காடு, தன்னந்தனியே ஒரு வீடு, அதில் வாழும் வயதான ஜோடிகள், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அதிலிருந்து அவர்களை காக்கும் கரேஜ் என்னும் நாய்க்குட்டி இதுதான் கதையின் கரு. ஆனாலும் கதை சொல்லும் விதத்தில் அசத்தியிருக்கிறார்கள். பிண்ணனி இசையும், அமானுஷ்ய சத்தங்களும் புது ரகம். தொடரின் துவக்கப்பாடலே கர கரவென ஒளித்துக்கொண்டிருக்கும் டிவியில் கரேஜ் மற்றும் குடும்பத்தினரின் அறிமுகம், கதைகளம் பற்றிய சுருக்கத்தை தொகுப்பாளர் ஒருவர் கூறுவதாக இருக்கும். பிரதானமாக இசையை தாண்டி விசித்திரமான சத்தங்கள் இசையாக பயன்படுத்தப்பட்டிருக்கும். ராம்ஸீயின் இரண்டாவது சாபத்தின் போது ஒலிக்கும் “ராம்ஸீஸீஸீஸீஸீஸீ……..” என்ற பாடல் சில நொடிகள் ஆனாலும் மயக்கிவிடும் ரகம். அடுத்ததாக கரேஜ். குண்டான உடலமைப்பு ஒல்லியான கை, கால்கள் (நம்புங்க கரேஜுக்கு கை உண்டு). ஆபத்துகளை கண்டு பயந்து அலறும்போதும், தம்பதிகளை காப்பாற்ற பயத்தைத் தாண்டி செயல்படும்போதும் மனதில் நெருக்கமானதொரு இடத்தை பிடித்துவிடுகின்றது. அதனுடைய சின்ன சின்ன அசைவுகளும் அவ்வளவு அழகாக (cute) இருக்கும்.




இந்த தொடரை உருவாக்கிய ஜான்.ஆர்.டில்வொர்த் நியூ யார்க் VISUAL ARTS பல்கலைகழகத்தில் பயின்றவர். பிறகு சில தொடர்களுக்கு கலை இயக்குனராக பணிபுரிந்தார். 1991ல் தனியாக ஒரு அனிமேஷன் கம்பேனியை துவங்கினார். அவர் உருவாக்கிய முதல் ஏழு நிமிட குறுங்கதைதான் Courage the cowardly dog: The chicken from outer space. டாம் அண்ட் ஜெர்ரியை உருவாக்கிய படைப்பாளியான ஜோசஃப் பார்பராவின் உதவியுடன் 1996ல் Cartoon network Primier Toon ல் தேர்ந்தெடுக்கப்பட்டு Cartoon network சேனலில் (Dexter’s laboratory, Powerspuff Girls முதலிய தொடர்களும்..) ஒளிபரப்பப்பட்டது. மேலும் 68வது ஆஸ்கர் விருது விழாவில் Best Animated Short Film என்ற வகைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலிலும்(Nomination list) இடம்பெற்றது. 2000ம் ஆண்டில் கார்டூன்களில் சிறந்த முயற்சிக்கான Annae Awardறஐ ஜான் ஆர் டில்வொர்த் பெற்றார். 2001ல் Best Sound Editing — Television Animated Series என்ற வகையில் சிறந்த கார்டூனுக்கான Golden Reel Awardsம் பெற்றது. Comedyhorror ல் பிரபலமடைந்த Courage the cowardly 1996 முதல் நான்கு சீசன்களாக (சீசனுக்கு 13 தொடர்) 2002 வரை வெளிவந்தது. 2014ல் ஸ்பெஷல் தொடர் ஒன்றும் வெளியிடப்பட்டது.

போர் தொடர்கிறது

நீங்கள் கற்பனை செய்து பார்த்ததுண்டா?இப்படியான இயேசுவை!தலை மயிர் மழிக்கப்பட்டு நிர்வாணமான நிலையில் ஒரு தொழுநோயாளி சாயலில்!எண்ணங்களில் இயேசு என்றென்றும் நீண்ட தலை முடியும்,தாடியுமாய் ஒட்டுத் துணியோடு சிலுவை மீது நிலைத்திருக்கிறார்.பாவத்தை ஒழிப்பது பற்றியும்,பரலோக பாதை குறித்தும் அவரது உருவம் விவரித்துக்கொண்டேயிருக்கிறது.நான் முதலில் சொன்ன இயேசு பாவத்தை அல்ல போரையும்,அழிவுகளையும் அர்த்தப்படுத்துகிறார் அகஸ்டா ருவா பஸ்டோஸின்(Augusto roa bastos) போர் தொடர்கிறது(Hijo De Hombre-Spanish)நாவலின் வழியாக..!

இலத்தீன் அமெரிக்க நாடான பராகுவேயில் சர்வதிகாரி ஸ்ட்ரோஸ்னர் ஆட்சிக்காலத்தில் கட்டவிழ்க்கப்பட்ட அடக்குமுறைகளையும்,கிளர்ச்சிகளையும் சபுகாய் என்ற கிராமத்தின் பின்னணியிலிருந்து விவரிக்கின்றது இந்நாவல்.1910 முதல் 1935 வரையிலான இருபத்தைந்து வருட காலகட்டத்தின் மீதே கதை குவிந்திருந்தாலும்,19-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் பின்னோக்கியும் செல்கிறது.அப்போதைய ஆட்சியாளரான டாக்டர்.ப்ரான்ஷியா(1814-1840) புரிந்த வன்கொடுமைகள் பற்றியும் விவரிக்கின்றது.

சிறுவன் மக்காரியோவின் தந்தை பிலார் சர்வதிகாரி ப்ரான்ஷியாவிடம் பணியாளனாக இருந்தார்.பிலார் ஒரு முலாட்டோ(நீக்ரோவுக்கும் வெள்ளை இனத்தவருக்கும் பிறந்தவர்).சிறுவன் மக்காரியோ ப்ரான்ஷியாவின் வீட்டிற்க்குள் சென்றபோது அங்கு யாரும் இல்லை.ப்ரான்ஷியா வேட்டைக்கு சென்றிருந்தார்.மேசையில் இருந்த தங்க நாணயத்தின் மீது ஆசைக்கொண்ட மக்காரியோ அதை கையில் எடுத்துப் பார்த்தான்.அவன் கை பொசுங்கிவிட்டது.பயந்து போன அவன் காசை மேசையின் மீது வைத்துவிட்டு ஓடிவிட்டான்.சற்றை நேரத்தில் அங்கு வந்த ப்ரான்ஷியா நாணயத்தைப் பார்க்கிறார்,சிறுவன் மக்காரியோவின் தீக்காயம்பட்ட கைகளை பார்க்கிறார்.நாணய திருட்டுக்கு தண்டனையாக தந்தையையே மகனுக்கு சவுக்கடிகள் கொடுக்க செய்கிறார்.இது கொடுங்கோன்மைக்கு சிறு உதாரணம்.

பல ஆண்டுகளுக்கு பிறகு,கிழவன் மக்காரியோ கிராமத்துக் குழந்தைகளுக்கு கேஸ்பர் மோராவின் கதையை சொல்கிறான்.தச்சனான கேஸ்பர் மோரா தொழுநோயால் பாதிக்கப்பட்டு காட்டில் தனியாக வாழும்போது செதுக்கியதே தலை மயிரற்ற நிர்வாண இயேசு சிலை.கிராம மக்கள் அதை கிராமத்தின் தேவாலயத்தில் வைக்க நினைக்கும்போது பாதிரிமார்கள் அந்த சிலை சாத்தானின் குறியீடு என தடுத்துவிட,இறுதியாக இடாபெ குன்றின் மீது நிறுத்தப்படுகிறது இயேசு சிலை. மயிறற்ற தலைக்கு தன் கூந்தலை அளிக்கிறாள் கிராமத்தாரால் வேசி என கூறப்பட்ட பெண்ணொருத்தி.இப்படியாக குன்றின் மேல் நின்ற இயேசு, அதற்கடுத்து தொடரும் சம்பவங்களின் அடையாளமாய் மாறிப்போகிறார்.

தன் குழந்தை அடிமையாக பிறக்கக்கூடாது என நினைக்கும் காஸியானோவும்,நாதியும் பண்ணையிலிருந்து தப்பிக்க செய்யும் முயற்சிகள் பெரும் அத்தியாயமாகவே தொடர்கிறது. போரினால் கிராமங்களை இழந்து அடிமையான மக்களையும்,அடிமைகளின் மீதான வன்முறைகளையும் காஸியானோ-நாதி தம்பதியரின் மூலம் வெளிக்கொணர்கிறார் பஸ்டோஸ். கிளர்ச்சியாளர்களையும்,அவர்கள் சர்வதிகார ஆட்சியினால் தண்டிக்கப்பட்ட முறைகளையும் அவர்கள் எழுதும் கடிதங்கள் மூலம் விவரிக்கின்றது அடுத்த அத்தியாயம்.ஒவ்வொரு அத்தியாயமும் முதலில் ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாது தோன்றினாலும்,பின்னால் அத்தியாயங்களில் அவற்றிற்கிடையேயான தொடர்பு புலப்படுகிறது.பராகுவேயில் நிலவி வந்த வறுமையையும்,துரோகங்களையும்,மீண்டும் மீண்டும் ஏற்பட்ட துன்பங்களையும், ஏமாற்றங்களையும் பற்றி உண்மைகளை சொல்லக்கூடிய, அதே சமயம் விரக்தியுணர்வை உண்டாக்காத வகையில் பஸ்டோஸ் தனது நாவலை சரியான விதத்தில் உருவாக்கியிருக்கிறார்.

உலகின் பண்டைய வரலாறு போர்களின் மூலம் எழுதப்பட்டது என்பதை மறுக்கமுடியாது. ஆக்கிரமிப்பு போர்களை போலவே,அடக்குமுறைக்கு எதிரான போர்களும் வரலாற்று பக்கங்களை நிரப்பியுள்ளன.மனிதன் தனக்கென நிலையான வாழ்விடத்தை தேர்ந்தெடுத்து வாழத்தொடங்கியதிலிருந்து இன்றுவரை போர்கள் வரலாற்றில் நிறைய மாற்றம் செய்திருக்கின்றன. போர் மற்றும் போரின் விளைவுகள் குறித்து பதிவு செய்யும் வகையில் நிறைய திரைப்படங்கள்,நாவல்கள்,கவிதைகள்,ஓவியங்கள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. போரினால் இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்து உலகெங்கும் பரவி ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சி காலத்தில் யூதர்களுக்கு அடுத்தப்படியாக அதிகளவில் இனப்படுகொலை செய்யப்பட்ட பூர்வக்குடிகளான ஜிப்சி(Zypsis) மக்களையும் வரலாறு அவ்வாறாக சில பகுதிகளில் குறித்துக்கொண்டது.வரலாறு அளித்த சிறு பகுதிகளில் நிரப்பிக்கொண்டவர்களில் பராகுவேயின் கதையும் ஒன்று.

இறுதியாக, போர் தொடர்கிறது நாவலை பற்றி எழுத்தாளர் ழான் ஃப்ராங்கோ எழுதியதிலிருந்து சில வரிகள்:
"எந்த நாட்டில் விவசாய வர்க்கத்தினர் தேசிய அளவில் அணித்திரட்ட முடியாத அளவுக்கு சிதறியும்,தனிமைப்படுத்தப்பட்டும் கிடக்கிறார்களோ, அந்த நாட்டில்”பூர்ஷ்வாக்களின் எழுச்சி” பற்றியோ,”புதிதாக வளர்ந்து வரும் வர்க்கங்களை” பற்றியோ பேசுவது மகவும் கடினம்."

Saturday, 24 September 2016

கார்ட்டூனும் நானும் 1

         
      புதிய Blog தொடங்கியதிலிருந்து எதையாவது எழுத வேண்டும் என யோசித்துக் கொண்டு ஒரு மாத காலமாக ஒரு போஸ்ட்டும் போட காணோம். இனி விஜயன் சார் பாணியில் வாரம் ஒரு போஸ்ட் போட்டுவிட வேண்டியதுதான். நமது போஸ்ட்டுகள் குறிப்பிட்ட ஒன்றை பற்றி மாத்திரமின்றி கார்ட்டூன், காமிக்ஸ், திரைப்படம், இசை, என மனதில் பட்டதையெல்லாம் எழுதிக்கொண்டு செல்வதாக இருக்கும். கார்ட்டூன்களை பற்றி எழுத வெகுநாளாய் எண்ணம் இருந்து வருகிறது. எதில் தொடங்குவது? எப்படி தொடங்குவது என யோசிக்கையில் கார்ட்டூன்களுக்கும், எனக்குமான பால்ய கால நினைவுகளில் தொடங்கலாம் என்பது சரியாகப்பட்டது. நான் விரும்பி பார்த்த பல கார்ட்டூன்களோடு அந்த கால சூழலும், நினைவுகளும் கூடவே நினைவில் நிற்கின்றன. கிட்டதட்ட இது ஒரு சிறுவனின் கார்ட்டூன் காதலின் கதை என வைத்துக்கொள்ளுங்களேன்.

             நான் சிறு பிள்ளையாய் இருக்கையில் வீட்டில் Onida Black&White TVதான் இருந்தது. எங்கள் தெருவிலேயே அப்போது எனது வீட்டோடு சேர்த்து 3 வீடுகளில்தான் டி.வி இருந்தது. அதுவும் 52 சேனல்கள் தெளிவாக எடுக்கும் இந்த கால டி.விக்கள் போல கிடையாது. அதற்கு ரிமோட் கிடையாது. சேனல் மாற்றுவதற்கான பொத்தானை திருகும்போது “பட், பட்” டென சத்தம் போடும். அப்போது (6வயது) அந்த பொத்தானை திருகும் பலம் கூட எனக்கு கிடையாது. அதில் மொத்தமாய் 5 முதல் 7 சேனல்கள் வரைதான் எடுக்கும். அதிலும் கார்ட்டூன் சேனல் ஒன்றுகூட கிடையாது.

         கார்ட்டூன்கள் பார்ப்பதே சொற்பமான அந்த வயதில் எனக்கு பார்க்க கிடைத்ததெல்லாம் சக்திமான், ஜீ பூம் பா, மாயா மச்சீந்திரா போன்ற உள்ளூர் சூப்பர் ஹீரோக்கள் தொடர்கள்தான். அவைகளையும் பிடிக்கும் என்றாலும் கார்ட்டூன்கள் பார்க்க முடியாத வருத்தம் இருக்கத்தான் செய்தது. நான் நினைத்துக் கொண்டேன் கார்ட்டூன்கள் நம் ஊரில் கிடையாது வெளிநாட்டில் மட்டும்தான் அந்த சேனல்கள் எடுக்கும்போல..! அந்த சமயத்தில்தான் சன் டி.வியில் “கிட்ஸ் ஜங்ஷன்” என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி. தினமும் மாலை நேரத்தில் சில கார்ட்டூன்கள் ஒளிபரப்ப ஆரம்பித்திருந்தார்கள். எனக்கு நினைவிருக்கும் வரை முதலாவதாக பார்த்த கார்ட்டூன் Popey-The Sailor Man என்றாலும் எதில் பார்த்தேன் என நினைவில் இல்லை. ஆனால் Casper போன்ற தொடர்கள் கூட அதே சமயம் ஒளிபரப்பப்பட்டிருந்தது. கிட்ஸ் ஜங்ஷனில் முதலாவதாக பார்த்த கார்ட்டூன் தொடர் “Mummies Alive” (சில வருடங்களுக்கு முன்பு வசந்த் தொலைக்காட்சியில் கூட ஓடிக்கொண்டிருந்தது).


 பிரம்மிடிலிருந்து வரும் நான்கு மம்மிக்கள் ஒரு சிறுவனை காப்பாற்ற செய்யும் சாகசங்கள் என்பது வரை நினைவிருக்கிறது. தொடர்ந்து பின்னாட்களில் “Magic School Bus, Denver-the dionosaur” போன்ற தொடர்களும் ஒளிபரப்பாயின.(பிறகு சிலகாலம் கழித்து இதேப்போல் குட்டீஸ் டைம்ஸ் என ஆரம்பித்து Powerpuff Girls, Superman, Batman போன்ற தொடர்களை ஒளிபரப்பினார்கள்.) ஆனால் என் போதாத காலம் இடைப்பட்ட காலத்தில் எங்கள் வீட்டில் கேபிள் இணைப்பு இல்லை. பிறகு ஒருவழியாக கம்பிகட்டி கனெக்சன் எடுத்தல் முறையில் சில காலம் டி.வி ஓடிக்கொண்டிருந்தது. லோக்கல் சேனல்கள் புதிதாய் வரத் தொடங்கிய காலமது. பெரும்பாலும் புதுப்பட பாடல்கள், இரவு 9 மணிக்கு மேல் புதுப்படங்கள் போய்க்கொண்டிருக்கும். அப்போது புதுப்படங்களை தியேட்டரில் பார்த்ததில்லை. கூட்டமாக கலர் டி.வி வைத்திருப்பவர்கள் வீட்டில் பார்ப்போம். நிறைய படங்கள் பார்க்க ஆரம்பித்தது அப்போதுதான். ஒருமுறை லோக்கல் சேனலில் ஒரு பூனையும், எலியும் அட்டகாசம் செய்யும் கார்ட்டூன் ஒன்று பார்த்தேன். பிறகுதான் அதன் பெயர் Tom & Jerry என தெரிந்தது. பிறகு Gift box, Sticker, Play Card என கிடைக்கும் பொருள்களில் உள்ள கார்டூன்களையெல்லாம் வரைய தொடங்கினேன். சுமாராய் இருக்கும் அதை பார்த்து என் நண்பர்கள் வாய் பிளந்தபோது உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு. அதுமுதல் நிறைய கார்ட்டூன்கள் நோட்டு போட்டு வரைய ஆரம்பித்தேன்.




        இப்படியே நாட்கள் கடந்தன. வீடுகள் முழுக்க கலர் டி.வி களமிறங்கிவிட்ட காலம். எங்கள் வீட்டிலோ அதே B&W டி.வி!! ஒருநாள் சேனல் மாற்றும் திருகியை திருகிக் கொண்டிருந்தபோது இரண்டு சேனல்களுக்கிடையே திடீரென்று ஒரு கார்ட்டூன் உருவம் தெரிந்து மறைந்தது. கார்ட்டூன் பேப்பர் கிடந்தாலே விடமாட்டோம், சேனல்னா.. சொல்லவா வேண்டும். ஆர்வத்துடன் அரைமணி நேரம் (ஒரு Flowக்கு எழுதுனேன். அரை மணி நேரத்திற்கு மேலயே ஆனது) போராடி ஓரளவு தெளிவாய் தெரியும் அந்த சேனலை பார்த்தேன். Cartoon Network!! வெற்றிகரமாய் வீட்டில் கார்ட்டூன் சேனல் எடுக்கும்போது 9ம் வகுப்பு வரை வந்துவிடேன். ஒவ்வொரு நாளும் CN எடுப்பதற்கு அரை மணி நேரத்திற்கு மேல் டி.வியை சரிசெய்ய வேண்டியிருந்தது. அப்போதுதான் CNல் BEN10 போட ஆரம்பித்திருந்தார்கள். அப்போது அது அவ்வளவு பிரபலம் கிடையாது. நான் விரும்பியதெல்லாம் Tom&Jerry, Scooby-Doo, Popey-The Sailor man போன்ற தொடர்களைதான். ஆனால் Ben10காகவே CN பார்க்கும் நிலைமையும் வந்தது.


ஒரு இடைசெருகல். நான் எட்டாம் வகுப்பு படிக்கையில் JETIX சேனல் POWER RANGERS பிரபலமான காலகட்டம். ஆனால் பலர் வீட்டு டி.விகளில் JETIX எடுக்காது. JETIX பார்க்கும் சில பசங்களும் தானே பவர் ரேஞ்சர்ஸை கண்டுபிடித்தது போல் சீன் போடுவான்கள். பவர் ரேங்சர்ஸ் போலவே CNலும் GRANDSAZERS என தொடர் போடுவதாக நண்பன் மூலம் தெரிந்தது. அவன் வீடு தூரம், சைக்கிளில் போவதே சிரமம். அப்போது என் மாமாவிற்கு மணாமாகி சில மாதங்கள் ஆகியிருந்தது. அவர்கள் வீட்டில் கலர் டி.வி உண்டு. 1கி.மீ தூரம் செல்ல வேண்டியிருக்கும். GRANDSAZERS பார்ப்பதற்காகவே நானும், அண்ணனும் சைக்கிள் எடுத்து கொண்டு மாமா வீட்டிற்கு செல்வோம். GRANDSAZERS எங்கள் பள்ளியில் பிரபலமானது. விளையாட்டு நேரங்களில் கிரான்ட்சேஸர்ஸ்தன் விருப்பமான விளையாட்டு. அது முடிந்து ஜஸ்டிரைஸர்ஸ் (JUSTIRIZERS), அதுவும் போனது, சேஸர் எக்ஸ் (Sazer X) வந்தது. அதற்கு மேல் எங்களுக்கு அதன் மீதான ஆர்வம் போய்விட்டது. கடைசியாக வந்த சேஸர் எக்ஸ் முந்தைய தொடர்களை போல் ஈர்க்கவில்லை. இவை மூன்றுமே கொரிய சாகச தொடர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இடைசெறுகல் முடிந்தது.


          சேஸர் எக்ஸ் முடிந்ததோடு நானும் எனது 8ம் வகுப்பை முடித்து 9ம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு செண்றேன்.அப்போதுதான் டப்பா டி.வியில் கார்டூன் சேனல் எடுக்கவத்தது, பென்10 முதலிய தொடர்களை பார்த்தது. அந்த பள்ளியில் கிரன்ட் சேஸர்ஸ் போல் இங்கே பென்10. தினமும் அதை பார்த்துவிட்டு வந்து கதை பேசுவதே எங்களது முக்கிய வேலை. படிப்பதெல்லாம் அடுத்த கட்டம் (எந்த காலத்துல படிச்சிருக்கோம்). அந்த பள்ளி போல இங்கே விளையாட தனி நேரம் ஒதுக்கப்படுவது கிடையாது. கதை பேசிதான் பொழுதுபோனது. அத்தனையும் கார்டூன், ஹாலிவுட் கதைகள். அவற்றை பார்க்க முடியாத பயல்கள் கதை கேட்க ஆர்வமாக வருவான்கள். அவன்களிடம் சொந்த கற்பனையும் சேர்த்து அளந்துவிடுவது(அவன்களுக்கு தெரியவா போகிறது). இப்படியாக பொழுதை கழித்த தருணத்தில் ஒரு நாள் ஒரு நல்ல சேதி, ஒரு கெட்ட சேதி வந்து விழுந்தது.

நினைவுகள் தொடர்கதை….(“தொடரும்”)